Friday, February 23, 2007

கவிதை மரம்

("திண்ணையில் பிப் 22, 2007 அன்று வெளிவந்த கவிதை)

வாழ்க்கைப் பிரவாகத்தில்
சில நினைவுகள்
விதைகளாகக்கூடும்...
அவற்றில் ஒரு சில
பறவைகளின் எச்சமாக
இதயத் தோட்டத்தில்
சிதறி விழக்கூடும்...
பருவங்கள் மாறி
நிலத்தில்
ஈரம் கசியும் போது
சில விதைகள்
மண்ணைத் தாண்டி
முளை விடக்கூடும்...
அப்போது
அவற்றின் வேர்கள்
தோட்டத்து மண்ணுக்குள்
ஆழமாகப் பதியக்கூடும்...
தரைக்கு மேலே
துளிர்விட்ட செடி
சில நாட்களில்
கவிதையென்னும்
மரமாக உருவெடுக்கக்கூடும்...
வலிமையான அதன்
கற்பனை கிளைகள்
வார்த்தை
இலைகளை தாங்கியிருக்கக்கூடும்...
வெறும் இலைகளிலோ
அல்லது கிளைகளிலோ
அல்லது வேர்களிலோ
அந்த மரத்தின்
உயிர்ப்பு
இல்லாமல் போகக்கூடும்...
ஆனால்
ஒன்றுகூடி கைகோர்த்து
கம்பீரமான மரமாக
ஒருசேர நிறபதிலே
அதன்
அழகும், உயிர்ப்பும் இருக்கக்கூடும்...
அந்தக் கவிதை மரத்தின்
பூக்களும், கனிகளும்
உங்கள்
புலன்களுக்கு விருந்தாகக் கூடும்...
சில நேரங்களில்
அதலிருந்து வீசும் தென்றல்
இதயத்தினை
மென்மையாக வருடிவிடக் கூடும்...
அந்த வருடலில்
சில கணங்களாவது
உங்களை
நீங்கள் இழந்துவிடக்கூடும்...

http://www.thinnai.com/?module=displaystory&story_id=30702223&format=html

சாமியாரா போலாம்..ஆனா...

காதல் கவிதெ எழுதலாம்னா
மனைவிய யோசிக்க வேண்டியிருக்கு...
ஜாலி கவிதெ எழுலாம்னா
வயசை யோசிக்க வேண்டியிருக்கு...
சீரியஸ் கவிதெ எழுதலாம்னா
"தமிழ்மண" மக்கள யோசிக்க வேண்டியிருக்கு...
சரி
நம்ம "வெட்டிப் பயல' மாதிரி
சாமியாரா போலாம்னா
குழந்தைய யோசிக்க வேண்டியிருக்கு...
ஆபீஸல வேல வெட்டி நிறைய
இல்லீனா இந்த மாதிரி
கவிதெ எழுத வேண்டிருக்கு...

ஆனா
மரமில்லாமலே தோப்பாயிட்டிருக்கு
இல்ல
காலமாகியும் கன்னியாவே இருக்கு
என் "ப்ளாக் சைட்"!

ரொம்ப வருத்தமாயிருக்கு..ஹி..ஹி..ஹி...:-))

Thursday, February 22, 2007

தாகம்

அவனுக்கு வேட்கை
எடுத்த போதெல்லாம்
வரிசையாக நின்ற
அவைகளில்
"இன்னிக்கு இது வேணும்" என்று
சுட்டிக்காட்டி
அதன் நிறத்தில்
மனதைப் பறிகொடுத்து
பளிங்கு மேனியை அணைத்து
முரட்டுப்பிடியில்
அடக்கி வைத்த உணர்ச்சிகளை
காற்றாய் விடுவித்து
முழுதுமாக அனுபவித்து
வேட்கையை தணித்துக்
கொண்டபின்
பணத்தை கையில்
அள்ளி கொடுக்கையில்
"ரொம்ப நல்ல சரக்கு
நாளைக்கும் இதே குடுங்க"ன்னு
சொல்லிவிட்டு
நகர்ந்த போது
சக்தியெல்லாம் போய்
உணர்ச்சிகளில்லாமல்
காலியாய் நின்றிருந்த
அந்த
"குளிர்பான புட்டி".

Wednesday, February 21, 2007

இளமைக் கால நட்பு

(மார்ச் 2007-ல் "வார்ப்பு" இதழில் வெளியிடப்பட்ட கவிதை)

நீயும், நானும்
கரகமாடிய அந்த
ஒற்றை விளக்கு அரசமரத்தடி...
தோல் கிழிந்து இரவெல்லாம்
சிராய்ப்பு வலி கொடுத்த
நாய்க்கர் வீட்டு வேப்பமரம்...
மட்டைகளை தோளில் சுமந்து
மைல்கணக்கில் நடந்து போய்
கிரிக்கெட் ஆடிய
சொரசொரப்பு மைதானங்கள்...
எதிரியின் பம்பரங்களை
சில்லு சில்லாக உடைத்த
பிரேமா வீட்டு முன்வாசல்...
பசியெடுக்காத நிலாவுக்கு
கும்மி தட்டி சோறூட்டிய
தாவணி சிட்டுக்களை
காண அமர்ந்த திண்ணைகள்...
குமாரிடம் மூக்குடைபட்டு
இரத்தம் சிந்திய
நெருஞ்சி முட்புதர்...
இப்படி
ஒவ்வொன்றாய்
பதினைந்து ஆண்டுகளில்
எல்லாவற்றையும்
மிதித்தழித்த கால அரக்கன்...
மிஞ்சியிருப்பது
நினைவுகள் மட்டும்...
சுவடுகளாய்...

இயற்கையின் உயிரையெடுத்து
உயர்ந்தோங்கி நிற்கும்
செத்துபோன
கான்கிரீட் கட்டடங்கள்... ஊரெங்கும்...
தென்றல் போய்
தேங்கிவிட்ட கொசுக்களை
விரட்டும் "பேன் காற்றுக்கள்"...
நாகரீகப் போர்வையில்
என் கிராமமும் மாறி வருகிறது
இன்னொரு நகரமாக...

எங்கும்
ஓய்வில்லா மனிதர்களின்
தேடல்கள்...தேடல்கள்... தேடல்கள்...

என் தலை வெள்ளிக் கம்பிகளையும்
உன் தலை வழுக்கையையும்
தாண்டி நின்ற
நம் புன்சிரிப்புகளும்...தழுவல்களும்...
ஆயிரம் மைல்களுக்கப்பாலிருக்கும்
நம் உடம்புகள்...
அடுத்தடுத்த வீட்டில் குடியிருக்கும்
நம் இதயங்கள்...

நண்பா!
நிகழ்வுகளையெல்லாம்
ஜீரணித்து
பசிவெறியோடு சுற்றித் திரியும்
காலங்களை வென்று நிற்கும்
நம் "நட்பு"
அற்புதத்தில் அற்புதம்!

http://www.vaarppu.com/php/bodymaker.php?id=729&col=3

Monday, February 19, 2007

காவிரி போற்றுதும்...காவிரி போற்றுதும்...

("மார்ச் 2007, இதழ் 87 "பதிவுகள்" இதழில் வெளியான கவிதை)

காவிரி மங்கை
சேலை கிழித்து
மானபங்கபடுத்தப்பட்டாள்...
சோழர்
புலிக் கொடிகள்
பறந்த திசைதிக்கும்
எலிக்கறி தின்ற
சோகங்கள்...
காவிரி வற்றிய
போதெல்லாம்
கர்நாடகத் தமிழர்
தாங்கிக் கொண்ட
அடிகளும், வலிகளும்...
வழிந்தோடிய அவரின்
கண்ணீரில் மட்டும்
நாம் வருடங்கள்
பயிர் செய்திருக்கலாம்...
ஆனால்,
சாமான்ய தமிழா!
நீயோ சலனமற்று கிடக்கிறாய்...
உன் வீட்டு
மங்கையரின் உணர்வுகள்
தொலைகாட்சி சீரியலில்
பறி போய்க் கொண்டிருக்கிறது...
உன் வீட்டு ஆடவரின்
உணர்வுகள் கிரிக்கெட் தொடரில்
பறி போய்க் கொண்டிருக்கிறது...
பொறுத்திரு!
சுவாசிக்கும் காற்றை
எந்த திசையிலிருந்து பெறுகிறாய்?
நாளை அதையும்
யாராவது
உரிமை கோர
வரக்கூடும்...
அந்த வேளை
சினிமா கொட்டகையில்
தமிழறியா நடிகையின்
குத்தாட்டத்தில்
உன் உணர்வுகள்
பறி போகக்கூடும்...

வேங்கைத் தமிழர்..
அது வரலாறு...
என் பிள்ளை
கதை கேட்பான்
தூங்கும் நேரத்தில்!


http://www.geotamil.com/pathivukal/poems_march2007_yazini.htm

Friday, February 16, 2007

சுயநலம்

எழுதியவர்: யாழினி அத்தன்

நீ சுவாசித்த காற்று
நீ உண்ணிய உணவு
நீ பருகிய தண்ணீர்
நீ உடுத்திய உடை
நீ உறங்கிய இடம்
நீ பேசிய வார்த்தைகள்
.........................
இப்படி எதுவுமே
உன்னுடயதாய்
இருந்ததில்லை...

குருதியில் பிரதிபலிக்கும்
இயற்கைச் சூத்திரங்கள்...
கோடி செல்கள்
அனைத்திலும்
அதன் நிர்பந்தங்கள்..

அண்டயோனியின்
இயக்கத்தில்தான்
நீ எடுக்கும் ஓய்வு...

யாசகஞ்செய்து
நாட்களையோட்டும்
மனிதா...
நீ மட்டும்
எப்படி ஒரு
அதம சுயநலமியாக?

Thursday, February 15, 2007

புத்தன் என்றொரு சாமுராய்

எழுதியவர்: யாழினி அத்தன்

அறியாமை போர்வையின்
கறுப்புத் திரையை கிழித்தெறிய
புத்தன் ஏந்தியதோ
'வைர வாள்" மகாசூத்திரம்...

ஆயிரம் நெஞ்சங்களை
அது பிளந்திருந்தும்
ஆண்டுகளுக்கு முன்னிருந்த
அதே பளபளப்பு
இன்னும்
ஒரு சொட்டு கூடக் குறையாமல்...

இரக்கம் என்ற சொல்லுக்கு
அவன் அகராதியில் அர்த்தமில்லை...

ஒரு குழந்தையைப் போல
கைகட்டி
அவன் முன்னே நின்றாலும்
தப்பாமல் பாய்ச்சிடுவான்
வாளினை உன்
இதயச் சுவற்றினுள்ளே...

சந்தேகம் வேண்டாம்!
ஒரு இடியை காட்டிலும் பலமாக
ஒரு மின்னலை காட்டிலும் வேகமாக
இறங்கும் உனக்குள்ளே ஒரு சக்தி...
இதயம் இரண்டாக மனம் மருண்டோட
சத்தமில்லாமல்
நீயும் செத்துப் போவாய்!

ஆனால்....ஆனால்...பேரதிசயம்
ஒன்று உனக்காக காத்திருக்கும்...

எந்த கணம் சிறுமனிதனாய் இறப்பாயோ
அதே கணம் ஒரு ஞாநியாய் பிறப்பெடுப்பாய்...
எந்த கணம் உன் சிற்றிதயம் பிளக்கப்பட்டதோ
அதே கணம் ஒரு செந்தாமரையாய் மலரும்...
பயந்து ஓடிப்போன உன் குரங்கு மனம்
அருவியில் குளித்த அழகு மானாய் திரும்பும்...
கண்களில் சலித்துப்பெடுத்துப்போன
இந்த உலகம் ஒரு அபூர்வ மரமாய் சுடர்விடும்...
செவிகள் கேட்ட இரைச்சல் சத்தங்கலெல்லாம்
சங்கீதம் நிறைந்த சாகரங்களாகும்...
உழைத்து சளைத்துப்போன உன் தேகமோ
உணர்வுகள் செறிந்த ரோஜா மலராகும்....
பிருதுவில் ஒளிந்திருந்த கடவுளின் இரகசியத்தை
தெரிந்து அனுபவித்து இன்புறுவாய்!

வாழ்க்கையைப் புறக்கணித்து
வழிதேடச் சொன்ன
துறவிகள் நடுவினிலே
"வைர வாள்" கொண்டு
புதிதாய் பிறக்கச் செய்து
வாழ்க்கையை "முழுதாய்"
உணரச் சொன்ன
புத்தன் ஒரு மகா "சாமுராய்"!

சாமுராய் - போர் வீரன்

Wednesday, February 14, 2007

குழாயடி ஈர்ப்புகள்

எழுதியவர்: யாழினி அத்தன்

(இந்த கவிதை "கீற்று" இதழில் பிப் 18, 2007 அன்று பிரசுரிக்கப்பட்டது)

கவிதைகள் வர்ணித்த
உன் கொடியிடையில்
பிளாஸ்டிக் குடம்...
அது பெருமைப்பட்ட
என் வைரத் தோளில்
தகரக் குடம்...
தண்ணீர் சுமைகளைத் தூக்கிதான்
நம்
காதலுக்கு வித்திட்டோம்...
குழாயடியில் நாம் செய்துகொண்ட
பார்வை பரிமாற்றங்கள்...
என் மடத்தன சேட்டைகளுக்கு
நீ பரிசளித்த புன்முறுவல்கள்...
என
உரங்களைத் தின்று
வளர்ந்த நம் காதல் செடி...
..........................
இன்று...
காலப் பரிணாமத்தில் காணாமல்
போய்விட்ட அந்த குழாயடி...
ஒருவேளை நம் காதல்
பூவாகி, காயாகி, கனியாகி
விதைகளையீன்றிருக்கக்கூடும்...
ஆனால்
மண்ணோடு மண்ணாகி, மக்கி
என் மனத்தின் ஆழத்தில்
ஒரு நிலக்கரித் துண்டாக
பொதிந்து கிடக்கிறது...
புகையினை கக்கும்
எப்போதாவது...
அந்த கக்கலில் சில நேரம்
கவிதைகளும்
அடங்கிப்போயிருக்கும்...

http://www.keetru.com/literature/poems/ramesh.html

மெளன மொழிகள்

எழுதியவர்: யாழினி அத்தன்

நீ பேசும் மொழி என்னவென்று
எனக்குத் தெரியாது...
நான் பேசும் மொழியும்
உனக்குப் புரியாது...
ஒவ்வொரு முறை
நம் கண்கள்
சந்தித்த போதெல்லாம்
நம் இதயங்கள்
கலந்துரையாடின...
அருகில்
சுற்றித்திரிந்த அறிவு
எங்கோ சந்திடுக்கில்
ஒளிந்து கொண்டது...
என் முன்னே நீ
இல்லாத போதெல்லாம்
இதயம் அறிவிடம்
சிறைபட்டுக் கொண்டது...
இவையிரண்டும் நடத்திய
அந்த மெளனப் போர்
முடிவில்லாத
ஈரான் - ஈராக் போர்...
ஒருவேளை
இதயம் வென்றிருந்தால்
காதல் வென்று
நம் மொழிகள்
சங்கமித்திருக்க வேண்டும்...
இல்லையேல்
அறிவு வென்று
நான் உன்னை முழுதுமாக
மறந்து போயிருக்க வேண்டும்...
இரண்டும் நடக்கவில்லை..
.......................................
இப்போது
நீ எங்கோ... நான் எங்கோ...
காலம் மறக்கடித்த
அந்தப் போர்...
மறக்காமல் நினைவூட்டும்
அதன் தழும்புகள்...

கோவில் சன்னதி

("திண்ணை" யில் பிப். 15, 2007 அன்று பிரசுரிக்கப்பட்டது)

கோவிலுனுள் தெய்வம் இருந்தும்
வழிப்போக்கரை வணங்கும்
பிரகாரத்து யாசகர்கள்...
"அம்மா தாயே தர்மம் போடுங்கம்மா"
என்றதொரு கூர்வாள்
நெஞ்சினிலே நேராக பாய்ந்தாலும்
இதயத்தை சுற்றிய இரும்புக் கவசம்
இறுக்கமாய் பூட்டித்
தன்னைக் காத்துக் கொள்ளும்...
ஆயிரம் மிதியடிகளில்
அரும்பிய அழகிய வர்ணஜாலம்
அதில் ஒரு சொட்டு கலக்க
வெறும் ஐம்பது நாணயம்தான்...

தவிலும் நாதமும் கூடிக்
குடும்பம் நடத்துவது கோவிலுக்குள்தான்...
கடலலை இரைச்சலில்
அந்த தமிழிசை மங்கினாலும்
நின்ற இடம் மாறாத
தெய்வம் அந்த தேனிசையில்
மெய்மறந்து நிற்கும்...

தீபத்தின் சோதியில்
கலங்கரை விளக்கான
கடவுளது முகம்...
தீபாரதனை தட்டில்
சில்லரை கவலையில்
அர்ச்சகரின் முகம்....
புதிதாய் பூத்திருந்த ரோஜாக்கள்
காந்தமாய் கவர்ந்தது கண்களை...
ஒவ்வொரு ரோஜாவுக்கும்
முள்வேலி காவலாய்
புதுமாப்பிள்ளைகள்...
கூட்டுச் சிறையிலிர்ந்து விடுபட்ட
பட்டாம்பூச்சிகளாய்
சிற்கடித்து பறந்து
தன்னுலகம் மறந்த காதலர்கள்...
வீட்டினில் விளையாட
தூண்களில்லை யென்பதாலோ
மண்டப கால்களில்
மறைந்து விளையாடும்
சிறு பிள்ளைகள்...
கோடி பணம் இருந்தும்
இன்னும் கோடி கோரிக்கைகளுக்கு
எழுதாத விண்ணப்பமிடும்
பட்டுவேட்டி பணக்காரர்கள்...
விண்ணளவு குப்பைகளை
தாங்கிய கனவு லாரியாய்
ஏழை மனிதர்கள்...
அறிவுப் பசியில்
அலசி அலசி
குழம்பிப் போயிருக்கும் நான்...
ஆலயத்துள் தேங்கிய
சேற்றிலே சிந்தனை
காலை ஊன்றியபின்
இன்னும் அழுக்காகிப்போன
என் மனது...

சந்தைக்கடை நெருக்கத்தில்
கசங்கிப்போன நாயாய்
வெளியே வந்தேன்...
காலில்லாத அந்த
காவியுடை யாசகனின்
அழுக்காணி மனைவி
உடுப்பில்லாத பச்சிளம் பாலகனை
இடுப்பில் கொண்டு
ஒடுக்குப் பாத்திரத்தைக் குலுக்கி
"ஐயா தர்மம் பண்ணுங்கய்யா
ரெண்டு நாளா சாப்பிடலை"
என்று கரைந்தக் கால்
என் கண்களின் ஓரம்
தேங்கிய துளியில்
இதயத்தின் இரும்புக் கதவு
உருகும் மெழுகானது...
அறிவுக் கண்கள் விழிக்குமுன்
செய்த அந்த கணக்கில்லாத
தர்மத்தில் அவளின்
கண நேர மகிழ்ச்சி...
அதில் எனக்குக் கிடைத்த
கடலளவு நிம்மதி...

கண்டுகொண்டேன்...

மரத்திலே கிட்டாத பழம்
மரத்தின் கீழே!!

http://www.thinnai.com/?module=displaystory&story_id=30702152&format=html