கவிதை மரம்
("திண்ணையில் பிப் 22, 2007 அன்று வெளிவந்த கவிதை)
வாழ்க்கைப் பிரவாகத்தில்
சில நினைவுகள்
விதைகளாகக்கூடும்...
அவற்றில் ஒரு சில
பறவைகளின் எச்சமாக
இதயத் தோட்டத்தில்
சிதறி விழக்கூடும்...
பருவங்கள் மாறி
நிலத்தில்
ஈரம் கசியும் போது
சில விதைகள்
மண்ணைத் தாண்டி
முளை விடக்கூடும்...
அப்போது
அவற்றின் வேர்கள்
தோட்டத்து மண்ணுக்குள்
ஆழமாகப் பதியக்கூடும்...
தரைக்கு மேலே
துளிர்விட்ட செடி
சில நாட்களில்
கவிதையென்னும்
மரமாக உருவெடுக்கக்கூடும்...
வலிமையான அதன்
கற்பனை கிளைகள்
வார்த்தை
இலைகளை தாங்கியிருக்கக்கூடும்...
வெறும் இலைகளிலோ
அல்லது கிளைகளிலோ
அல்லது வேர்களிலோ
அந்த மரத்தின்
உயிர்ப்பு
இல்லாமல் போகக்கூடும்...
ஆனால்
ஒன்றுகூடி கைகோர்த்து
கம்பீரமான மரமாக
ஒருசேர நிறபதிலே
அதன்
அழகும், உயிர்ப்பும் இருக்கக்கூடும்...
அந்தக் கவிதை மரத்தின்
பூக்களும், கனிகளும்
உங்கள்
புலன்களுக்கு விருந்தாகக் கூடும்...
சில நேரங்களில்
அதலிருந்து வீசும் தென்றல்
இதயத்தினை
மென்மையாக வருடிவிடக் கூடும்...
அந்த வருடலில்
சில கணங்களாவது
உங்களை
நீங்கள் இழந்துவிடக்கூடும்...
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30702223&format=html
0 comments:
Post a Comment