Wednesday, February 14, 2007

கோவில் சன்னதி

("திண்ணை" யில் பிப். 15, 2007 அன்று பிரசுரிக்கப்பட்டது)

கோவிலுனுள் தெய்வம் இருந்தும்
வழிப்போக்கரை வணங்கும்
பிரகாரத்து யாசகர்கள்...
"அம்மா தாயே தர்மம் போடுங்கம்மா"
என்றதொரு கூர்வாள்
நெஞ்சினிலே நேராக பாய்ந்தாலும்
இதயத்தை சுற்றிய இரும்புக் கவசம்
இறுக்கமாய் பூட்டித்
தன்னைக் காத்துக் கொள்ளும்...
ஆயிரம் மிதியடிகளில்
அரும்பிய அழகிய வர்ணஜாலம்
அதில் ஒரு சொட்டு கலக்க
வெறும் ஐம்பது நாணயம்தான்...

தவிலும் நாதமும் கூடிக்
குடும்பம் நடத்துவது கோவிலுக்குள்தான்...
கடலலை இரைச்சலில்
அந்த தமிழிசை மங்கினாலும்
நின்ற இடம் மாறாத
தெய்வம் அந்த தேனிசையில்
மெய்மறந்து நிற்கும்...

தீபத்தின் சோதியில்
கலங்கரை விளக்கான
கடவுளது முகம்...
தீபாரதனை தட்டில்
சில்லரை கவலையில்
அர்ச்சகரின் முகம்....
புதிதாய் பூத்திருந்த ரோஜாக்கள்
காந்தமாய் கவர்ந்தது கண்களை...
ஒவ்வொரு ரோஜாவுக்கும்
முள்வேலி காவலாய்
புதுமாப்பிள்ளைகள்...
கூட்டுச் சிறையிலிர்ந்து விடுபட்ட
பட்டாம்பூச்சிகளாய்
சிற்கடித்து பறந்து
தன்னுலகம் மறந்த காதலர்கள்...
வீட்டினில் விளையாட
தூண்களில்லை யென்பதாலோ
மண்டப கால்களில்
மறைந்து விளையாடும்
சிறு பிள்ளைகள்...
கோடி பணம் இருந்தும்
இன்னும் கோடி கோரிக்கைகளுக்கு
எழுதாத விண்ணப்பமிடும்
பட்டுவேட்டி பணக்காரர்கள்...
விண்ணளவு குப்பைகளை
தாங்கிய கனவு லாரியாய்
ஏழை மனிதர்கள்...
அறிவுப் பசியில்
அலசி அலசி
குழம்பிப் போயிருக்கும் நான்...
ஆலயத்துள் தேங்கிய
சேற்றிலே சிந்தனை
காலை ஊன்றியபின்
இன்னும் அழுக்காகிப்போன
என் மனது...

சந்தைக்கடை நெருக்கத்தில்
கசங்கிப்போன நாயாய்
வெளியே வந்தேன்...
காலில்லாத அந்த
காவியுடை யாசகனின்
அழுக்காணி மனைவி
உடுப்பில்லாத பச்சிளம் பாலகனை
இடுப்பில் கொண்டு
ஒடுக்குப் பாத்திரத்தைக் குலுக்கி
"ஐயா தர்மம் பண்ணுங்கய்யா
ரெண்டு நாளா சாப்பிடலை"
என்று கரைந்தக் கால்
என் கண்களின் ஓரம்
தேங்கிய துளியில்
இதயத்தின் இரும்புக் கதவு
உருகும் மெழுகானது...
அறிவுக் கண்கள் விழிக்குமுன்
செய்த அந்த கணக்கில்லாத
தர்மத்தில் அவளின்
கண நேர மகிழ்ச்சி...
அதில் எனக்குக் கிடைத்த
கடலளவு நிம்மதி...

கண்டுகொண்டேன்...

மரத்திலே கிட்டாத பழம்
மரத்தின் கீழே!!

http://www.thinnai.com/?module=displaystory&story_id=30702152&format=html

5 comments:

said...

உண்மை உனர்வுகளின் ஊர்வலமாய் வரும் உங்கள் கவிதைகள் சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்.

Anonymous said...

திரு. செழியன் அவர்களே

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

என் படைப்புகளை காண அடிக்கடி
விஜயம் செய்யவும்.

யாழினி அத்தன்

Anonymous said...

Ramesh:

This is one is very good, Keep posting your nice works!

said...

Rombavum arumayaha irunthathu intha "Koyil Sannathi".... Vazhutukkal

said...

பாரி, முருகன்,

இருவருக்கும் என் நன்றிகள்