Wednesday, February 21, 2007

இளமைக் கால நட்பு

(மார்ச் 2007-ல் "வார்ப்பு" இதழில் வெளியிடப்பட்ட கவிதை)

நீயும், நானும்
கரகமாடிய அந்த
ஒற்றை விளக்கு அரசமரத்தடி...
தோல் கிழிந்து இரவெல்லாம்
சிராய்ப்பு வலி கொடுத்த
நாய்க்கர் வீட்டு வேப்பமரம்...
மட்டைகளை தோளில் சுமந்து
மைல்கணக்கில் நடந்து போய்
கிரிக்கெட் ஆடிய
சொரசொரப்பு மைதானங்கள்...
எதிரியின் பம்பரங்களை
சில்லு சில்லாக உடைத்த
பிரேமா வீட்டு முன்வாசல்...
பசியெடுக்காத நிலாவுக்கு
கும்மி தட்டி சோறூட்டிய
தாவணி சிட்டுக்களை
காண அமர்ந்த திண்ணைகள்...
குமாரிடம் மூக்குடைபட்டு
இரத்தம் சிந்திய
நெருஞ்சி முட்புதர்...
இப்படி
ஒவ்வொன்றாய்
பதினைந்து ஆண்டுகளில்
எல்லாவற்றையும்
மிதித்தழித்த கால அரக்கன்...
மிஞ்சியிருப்பது
நினைவுகள் மட்டும்...
சுவடுகளாய்...

இயற்கையின் உயிரையெடுத்து
உயர்ந்தோங்கி நிற்கும்
செத்துபோன
கான்கிரீட் கட்டடங்கள்... ஊரெங்கும்...
தென்றல் போய்
தேங்கிவிட்ட கொசுக்களை
விரட்டும் "பேன் காற்றுக்கள்"...
நாகரீகப் போர்வையில்
என் கிராமமும் மாறி வருகிறது
இன்னொரு நகரமாக...

எங்கும்
ஓய்வில்லா மனிதர்களின்
தேடல்கள்...தேடல்கள்... தேடல்கள்...

என் தலை வெள்ளிக் கம்பிகளையும்
உன் தலை வழுக்கையையும்
தாண்டி நின்ற
நம் புன்சிரிப்புகளும்...தழுவல்களும்...
ஆயிரம் மைல்களுக்கப்பாலிருக்கும்
நம் உடம்புகள்...
அடுத்தடுத்த வீட்டில் குடியிருக்கும்
நம் இதயங்கள்...

நண்பா!
நிகழ்வுகளையெல்லாம்
ஜீரணித்து
பசிவெறியோடு சுற்றித் திரியும்
காலங்களை வென்று நிற்கும்
நம் "நட்பு"
அற்புதத்தில் அற்புதம்!

http://www.vaarppu.com/php/bodymaker.php?id=729&col=3

2 comments:

Anonymous said...

எப்படீங்க இப்படியெல்லாம் கவிதை எழுதரீங்க....

good work man...

Ravikumar
Cermet

Anonymous said...

amarkkalamaaaana kavithai. Melum Melum ungaLidam edhirpaarkkiRom. Ungal veLippaadugalil thani muththirai therigiradhu. idhu varai palar solla vittuppona karpanaigaLai ungal kavithaigaLil Kaangiren.

ippadikku
Balaji