Thursday, March 1, 2007

கவிஞன்

நான் ஒரு கவிஞன்
மின்மினிபூச்சி போல...
முடிவில்லாத
காலத் தொடர்ச்சியின்
ஒரு சில
அணுத்துளிகளில் மட்டும்...

மயிர்கூச்செறியும் இரவுகளினூடே
பரபரக்கும் பகல்களினூடே
கர்பரிக்கும் கருக்கல்களினூடே
பிரசவிக்கும் மழையினூடே
மொட்டை வெளிகளினூடே
முடி வெட்டாத காடுகளினூடெ
...................
இன்னும் எங்கெங்கோ
தேடி தேடியலைவேன்
கதவுகளுக்குப் பின்
ஒளிந்திருக்கும்
வார்த்தைகளுக்காக...

சுழன்றுவரும் நீரோட்டத்தில்
ஒரு மீன்கொத்தி போல...
கணங்கள் கழிந்துபோய்...
நாட்கள் கழிந்துபோய்...
வாயில் சிக்கிப்போன
ஓரிரு மீன்களும்
ஊசிப்போன
உயிரில்லாத
வெறும் சக்கை
வார்த்தைத் துகள்களாக...

க்ஷணநேர மோன தவங்கள்
இசைக்கும் இதயச் சுவர்களில்
உணர்வுகளின் ஆலாபனையை...
மோகனமாக, முகாரியாக,
இன்னும் அறியப்படாத
என்னென்னவோ ராகங்களில்...
பிரசவமாகும் வார்த்தைகள்
இதயக்குழந்தைகளாக...

வார்த்தைகளை விட
வெற்றிடத்தின் அர்த்தம் கூட...
சக மூச்சுகளுக்கிடையே
இடைபட்ட தெய்வீகமாக
உயிரினை சுமந்தபடி...
வெளிப்பார்வைக்கு காற்றாக
ஒன்றுமில்லாமல்...
கூர்ந்து ஊடே நோக்கின்
அணுத்துளிதோறும்
மறைந்திருக்கும்
உயிர்களின் பரவல்...

இன்றாவது...
என்றாவது...
சுவாசிக்குங்கால்
அந்த உயிர்கள்
உங்கள் இதயத்தின்
சமீபம் வந்து போகலாம்...

அந்த
ஒரு சில கணங்களில்...
மின்மினிப் பூச்சி போல
விட்டு விட்டு ஒளிரும்
நானும் ஒரு கவிஞன்...

0 comments: