Monday, March 26, 2007

சுடரின் மௌனம்

("திண்ணை"யில் மார்ச் 22, 2007 அன்று பிரசுரிக்கப்பட்ட கவிதை)

இறைவன் என்றொரு தச்சன்
இரவெல்லாம் கண்விழித்து
இழைத்து இழைத்து
செதுக்கிய வீணையொன்று
செவிடன் கையிலே சிறைப்பட,
மௌனமாய் அழுது நிற்கும்
கம்பியிழையின் விசும்பல்கள்
எவர் காதினிலும் விழுவதில்லை!

காதலிக்கும் போது
காமதேனுவாய் ஜொலிப்பதும்
கல்யாணத்துக்குப் பின்
அடிமாடாய் போவதும்
மூன்று முடிச்சு கயிற்றுக்கும்
மூக்கணாங்கயிறுக்கும்
வித்தியாசம் அறியாதவன்
வண்டியை ஓட்டும்போது!

யாக சோதியை முன்வைத்து
ஓதிய வேத மந்திரங்கள்
காயப்பட்ட போது
தூர நின்று வேடிக்கை பார்க்க,
கல்யாணத்திற்கு சாட்சியாக
நின்ற கடவுள்கூட
பதிலேதும் சொல்லாமல்
ஊமையாகிப் போனான்!

முன்னொரு பொழுதில்
உன்னை இசை பாடிய
அதே உதடுகள் இன்று
ஓயாமல் வசை பாடினாலும்
மெழுகுவர்த்தியாய்
நீ எரிந்து கொண்டிருப்பது
விசிறிக்கடியில் வீடே
சுகமாக உறங்கத்தானென்று
யாருக்கும் புரியவில்லை!

படிப்பு, வேலை,
நண்பர்கள், உறவுகள்
பெற்றோர், எண்ணங்கள்
என வரம்பில்லாமல்
தியாகம் செய்துவிட்டு
கனவுகளோடு நுழைந்தாய்
புகுந்த வீட்டின் தீபம் எரிய...
இலவம் பஞ்சான
உன் நெஞ்சினிலே
பற்றிய நெருப்பை
அணைக்க யாருமில்லை!

பெண்ணே...
உன் விழியோரம்
திரண்டோடக் காத்திருக்கும்
உருண்டைத் துளியில்
உப்பாகக் கரைந்திருக்கும்
சோகங்கள்
நிலவின் வழி
கைநீட்டும்
கருமேகங்களாக...
ஏங்கிக் தவிக்கும்
இருட்டுக்கள்
உன் ஒளிக்காக...
கரம் பட்டு
துவண்டு எழுவோம்
என்ற நம்பிக்கையோடு!


(செய்தி: பெண்களை அடிப்பதில் முன்னணி மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.)


http://www.thinnai.com/?module=displaystory&story_id=30703223&format=html

Thursday, March 22, 2007

வசந்தத்தின் திறப்பு விழா

(மிச்சிகன் தமிழ்சங்கத்தின் 'கதம்பம்' இதழில் பிரசுரமாகவுள்ள கவிதை)

வர்ணம் பூசி காதலுக்கு
வாழ்த்துச் சொன்ன
பூக்களெல்லாம்
சிரித்துக் கொண்டே
மரித்துப் போக
கையசைத்து வரவேற்ற
தோட்டமரக் கிளைகளெல்லாம்
பழனி மலை பக்தன் போல
மொட்டையாய் வீற்றிருக்கும்...

பிரிதலின் துக்கத்தை
எச்சிலாய் விழுங்கிவிட்டு
மௌனமாய் பார்த்திருக்கும்
மொட்டை மரங்கள்
தன் மேனி தொட்டு
பறவைகள் கொஞ்சும்
நாட்களை நோக்கி
காலியாய் காத்திருக்கும்...

மருமகளின் வீட்டிற்கு
கோபமாய் வந்திறங்கி
நடுக்கம் கொடுக்கும்
மாமியார் போல
கடுங்குளிரின் ஆட்சியிலே
மிச்சிகனின் சுதந்திரம்
மொத்தமாய் பறிபோகும்...

ஊரையே மூடியிருக்கும்
ஒற்றை போர்வையொன்று
வெள்ளியாய் மின்ன
நெய்தவன் யாரென்று
கேட்கத்தான் ஆளில்லை...

மாதங்கள் ஓடியபின்
காலத்தின் கதவுகளில்
மெதுவாய் ஒலிக்கும்
வசந்தத்தின் தட்டல்கள்...
கார்மேகத்தின் கைப்பிடியிலிருந்து
மெல்ல நழுவும்
நிலவு போலே
ஆதவனின் அரவணைப்பில்
வெட்கமாய் உருகியோடும்
பனித்துகள்கள்...

வரவேற்பு கீதமாய்
வாசலெங்கும் ஒலிக்கும்
பறவைகளின் இசைகள்...
வழியெங்கும் மலர் தூவி
கரத்தினிலே பச்சைக்கொடி
ஏந்தி நிற்கும் மரங்கள்...
பூக்களைக் காதலிக்க
மெல்லமாய் ரீங்காரம்
பாடும் வண்டுகள்...
பூங்கா திடல்களிலே
சத்தமிட்டு அங்குமிங்கும்
ஓடியாடும் பிள்ளைகள்...

மகிழ்ச்சி இசை
எங்கும் பரவ
மணிகளை அடித்து
வாழ்த்துகீதம் பாடிவரும்
வசந்தம் வருகிறது
அதோ! அதோ!
ஒன்றுகூடி வரவேற்போம்
இந்த மார்ச் மாதத்திலே!!

Wednesday, March 21, 2007

சொல் ஒரு சொல்

சொல்
ஒரு
சொல்

உன்னோடு
வரச்
சொல்

இல்லை
தூரப்
போகச்
சொல்

போதும்
உன்
விழிச்
சொல்

வேண்டும்
உன்
வாய்ச்
சொல்

சொல்லாமல்
தினமும்
சொல்லும்
சொல்லுக்கு
வாய்திறந்து
அர்த்தம்
சொல்

ஓவியனுக்கு
ஒரு
கைச்
சொல்

பாடகனுக்கு
ஒரு
குரல்
சொல்

ஞானிக்கு
ஒரு
அறிவுச்
சொல்

என்
சொல்
இதயச்
சொல்

சொல்
எனக்கு
ஒரு
பதில்
சொல்

முள்ளாக
தொண்டையில்
சிக்கின
வார்த்தையை
வெளியே
எடுத்துச்
சொல்

அது
என்
உயிர்ச்
சொல்

சொல்
நீ
ஒரு
சொல்

சொல்வதை
நான்
சொல்லிவிட்டு
நிற்கிறேன்
உன்
சொல்லுக்கு!

Friday, March 16, 2007

என்னை எனக்கு

("பதிவுகள்" ஏப்ரல் 2007 இதழில் வெளியானது)
யாசிக்கும் கைகள்
நீளும் போதெல்லாம்
சட்டைப் பையினை
விரல்கள் வருடி
உதட்டைப் பிதுக்கி
"பாவ்லா" செய்யும்...

அநீதியை ஒழிக்கத்
தலைவர் அவதாரம்
எடுக்கும் சினிமா
நுழைவுச் சீட்டினை
"பிளாக்"கில் வாங்கி
ரசித்துப் பார்க்கும்...

கட்டண கழிப்பிடத்தில்
காசுகளை செலுத்த
நிராகரித்து
"சிறுநீர் கழிக்காதீர்"
சுவற்றின் பரப்பில்
கூட்டத்தோடு நின்று
சிறுநீர் கழிக்கும்...

பிளாஸ்டிக் கோப்பையின்
தேநீர் சுவையில்
சற்றே இளைப்பாறி
காலியான கோப்பையை
இரயில்வண்டியின்
கம்பி சன்னலில்
தூக்கிப் போடும்...

சாலையில் தோய்ந்திருக்கும்
சிவப்புக்கறை நடுவிலே
அடிபட்டுக் கிடக்கும்
சக மனிதரை
கண்டும் காணாமல்
போகும்...

அபிமானங்களற்ற
துளிகளாலும்
அபிமானமுள்ள
துளிகளாலும்
நிரம்பி வழியும்
வாழ்க்கைக் கோப்பை...

கேடுகள் பரவியிருக்கும்
சுயநலப் பொழுதுகளில்
வாழ்வேன்
என்னை எனக்குப்
பிடிக்காமலே...

வெட்கப்படாமல்
விரவிக் கிடக்கும்
சமுதாயக் கேடுகள்...
நெய்யினை ஊற்றி
வேள்வித்தீயாய்
வளர்க்கும் அலட்சிய
அணுகல்கள்...

சமுதாய அநீதிகளை
தட்டி கேட்க
எனக்கு நானே
சூளுரைப்பேன்
எனக்கு என்னைப்
பிடித்திருந்தால்
போதுமென்று
அறியாமலே!

Friday, March 9, 2007

காலப் பிரவாகம்

("திண்ணை" இதழில் மார்ச் 08, 2007 அன்று பிரசுரிக்கப்பட்ட கவிதை)

பரிமாணமில்லாத
இருட்டுப் பிரதேசத்துக்குள்
வீர நடைபோடும்
கொலம்பஸ்களாக
கடிகாரங்கள்...
பிறப்புக்கும், இறப்புக்கும்
உள்ள இடைவெளியில்
இரயில்வண்டியாக
நம்மையும்
ஏற்றிச் செல்லும்...!

ஏ.சி. பெட்டியில்
இருந்தாலும்
ஓசி பெட்டியில்
இருந்தாலும்
ஊசிமுனை
அளவுகூட
வித்தியாசமில்லை...
சக பயணியர்க்கு
கண்ணீர் மல்க
கையசத்து விட்டு
ஏதோ ஒரு
நிறுத்தத்தில்
இறங்கும் போது
எல்லாருமே
ஒன்றுதான்...!

சைவமாயிருந்தாலும்
அசைவமாயிருந்தாலும்
மென்று அதை விழுங்கிச்
செல்லும் எல்லோருமே
அசைவப் பிரியர்கள்தான்...
விழுங்கினாலும் இல்லை
தூர நின்று புழுங்கினாலும்
ஒரு மலைப்பாம்பு போல
நம்மை
விழுங்காமல்
விடுவதில்லை...!

வெட்டியானும்,விஞ்ஞானியும்
ஏழையும்,பணக்காரனும்
அரசியல்வாதியும்,முனிவனும்
மற்றவரோடு ஒரே
கூண்டில் நின்று
ஏக்கத்துடன் கம்பி
வழியே பார்க்கும்
சமத்துவபுரச் சிறையாக
உலகம்...!

இருட்டுக்களைத் தின்று
வெளிச்சங்களும்
கோடைகளைத் தின்று
குளிர்களும்
ஒன்றைத் தின்று
இன்னொன்றாக
ஒரு ஃசிப்ட் தொழிலாளி
போலமாறி மாறி
பணி புரியும்...!

ஒரு நீரோடையாக
நிற்காமல் ஊர்ந்து
சென்றாலும்
ஒரு கூழாங்கல்லாய்
அங்கேயேதான்
அமர்ந்திருக்கும்...
காற்றைப் போல
புலப்படாமல்
இருந்தாலும்
உரசலின் சலசலப்பில்
தன் இருப்புகளைத்
தெரியப்படுத்தும்...!

விடியற்காலை ரசம்
பூசிய கண்ணாடிகள்
மௌனமாய்
வினவி நிற்கும்
முகச் சுருக்கங்களின்
கதைகளை...
சாயம் பூசிய
தலைமுடிகள்
கோடி பொய்கள்
சொன்னாலும்
வழித்த தாடையில்
துளிர்விடும்
ஓரிரு வெள்ளி தண்டுகள்
காட்டிக்
கொடுத்துவிடும்...!

கல்யாணப் பந்தியில்
கைநக்கி
விரல்கள் சூப்பி
வயிறு முட்ட
சாப்பிட்டுவிட்டு
வீசியெறிந்த
எச்சில் இலைகளாக
வரலாறுகள்...
குப்பைமேட்டுப்
பிராணிகளின் மீத
இலைப் போராட்டத்தில்
உணரப்படும்
வரலாறுகளின்
மகிமை...!

http://www.thinnai.com/?module=displaystory&story_id=30703083&format=html

Friday, March 2, 2007

நிலவு "டால்பின்"

(திண்ணை இதழில் மார்ச் 1, 2007 அன்று வெளியிடப்பட்ட கவிதை)

காலை முதல் மாலை வரை
புன்முருவல் பூத்த
லேலாண்ட் லாரியாக
அலுவலகத்திலே...
மாலை முதல் இரவு வரை
சக குடும்பத்தினர்க்கு
இலவச கால் டாக்சியாக
வீட்டினிலே...
அரிதாரமில்லாமல் அரங்கேறும்
தினசரிக் கூத்தில்
மீதமான சக்கைகளையும்
பிழிந்தெடுத்த கவலைகளையும்
யாரிடமும் திணிக்க
திரனில்லாமல்
ஊரே கண்மூடி உறங்கியபின்
சத்தமில்லாமல்
கதவுகளை திறந்து
மொட்டை மாடிக்குப் போய்
காயாத கருங்கடலில்
வெள்ளி மீன்களின் நடுவே
உலவிவந்து
வெள்ளை டால்பினாக
முற்றத்தின் உச்சியிலே
வழி மேல் விழி வைத்து
எனக்காக காத்திருந்த
அவளிடம்
பேசினேன் வாய்திறக்காமல்
கேட்டேன் சத்தமில்லாமல்
பார்த்தேன் விழி இமைக்காமல்
ஆழப் பரிவர்த்தனையால்
சம்பவித்த மனக்குளியலில்
அழுக்கினை கரைத்துவிட்டு
பாரமிழந்து திரும்ப வந்து
போர்வைக்குள்ளே
புகுந்துகொண்டேன்
நள்ளிரவுக் காதலியின்
நாளை வருகையை
ஆவலோடு எதிர்நோக்கி!

http://www.thinnai.com/?module=displaystory&story_id=30703012&format=html

Thursday, March 1, 2007

கவிஞன்

நான் ஒரு கவிஞன்
மின்மினிபூச்சி போல...
முடிவில்லாத
காலத் தொடர்ச்சியின்
ஒரு சில
அணுத்துளிகளில் மட்டும்...

மயிர்கூச்செறியும் இரவுகளினூடே
பரபரக்கும் பகல்களினூடே
கர்பரிக்கும் கருக்கல்களினூடே
பிரசவிக்கும் மழையினூடே
மொட்டை வெளிகளினூடே
முடி வெட்டாத காடுகளினூடெ
...................
இன்னும் எங்கெங்கோ
தேடி தேடியலைவேன்
கதவுகளுக்குப் பின்
ஒளிந்திருக்கும்
வார்த்தைகளுக்காக...

சுழன்றுவரும் நீரோட்டத்தில்
ஒரு மீன்கொத்தி போல...
கணங்கள் கழிந்துபோய்...
நாட்கள் கழிந்துபோய்...
வாயில் சிக்கிப்போன
ஓரிரு மீன்களும்
ஊசிப்போன
உயிரில்லாத
வெறும் சக்கை
வார்த்தைத் துகள்களாக...

க்ஷணநேர மோன தவங்கள்
இசைக்கும் இதயச் சுவர்களில்
உணர்வுகளின் ஆலாபனையை...
மோகனமாக, முகாரியாக,
இன்னும் அறியப்படாத
என்னென்னவோ ராகங்களில்...
பிரசவமாகும் வார்த்தைகள்
இதயக்குழந்தைகளாக...

வார்த்தைகளை விட
வெற்றிடத்தின் அர்த்தம் கூட...
சக மூச்சுகளுக்கிடையே
இடைபட்ட தெய்வீகமாக
உயிரினை சுமந்தபடி...
வெளிப்பார்வைக்கு காற்றாக
ஒன்றுமில்லாமல்...
கூர்ந்து ஊடே நோக்கின்
அணுத்துளிதோறும்
மறைந்திருக்கும்
உயிர்களின் பரவல்...

இன்றாவது...
என்றாவது...
சுவாசிக்குங்கால்
அந்த உயிர்கள்
உங்கள் இதயத்தின்
சமீபம் வந்து போகலாம்...

அந்த
ஒரு சில கணங்களில்...
மின்மினிப் பூச்சி போல
விட்டு விட்டு ஒளிரும்
நானும் ஒரு கவிஞன்...