Friday, March 16, 2007

என்னை எனக்கு

("பதிவுகள்" ஏப்ரல் 2007 இதழில் வெளியானது)
யாசிக்கும் கைகள்
நீளும் போதெல்லாம்
சட்டைப் பையினை
விரல்கள் வருடி
உதட்டைப் பிதுக்கி
"பாவ்லா" செய்யும்...

அநீதியை ஒழிக்கத்
தலைவர் அவதாரம்
எடுக்கும் சினிமா
நுழைவுச் சீட்டினை
"பிளாக்"கில் வாங்கி
ரசித்துப் பார்க்கும்...

கட்டண கழிப்பிடத்தில்
காசுகளை செலுத்த
நிராகரித்து
"சிறுநீர் கழிக்காதீர்"
சுவற்றின் பரப்பில்
கூட்டத்தோடு நின்று
சிறுநீர் கழிக்கும்...

பிளாஸ்டிக் கோப்பையின்
தேநீர் சுவையில்
சற்றே இளைப்பாறி
காலியான கோப்பையை
இரயில்வண்டியின்
கம்பி சன்னலில்
தூக்கிப் போடும்...

சாலையில் தோய்ந்திருக்கும்
சிவப்புக்கறை நடுவிலே
அடிபட்டுக் கிடக்கும்
சக மனிதரை
கண்டும் காணாமல்
போகும்...

அபிமானங்களற்ற
துளிகளாலும்
அபிமானமுள்ள
துளிகளாலும்
நிரம்பி வழியும்
வாழ்க்கைக் கோப்பை...

கேடுகள் பரவியிருக்கும்
சுயநலப் பொழுதுகளில்
வாழ்வேன்
என்னை எனக்குப்
பிடிக்காமலே...

வெட்கப்படாமல்
விரவிக் கிடக்கும்
சமுதாயக் கேடுகள்...
நெய்யினை ஊற்றி
வேள்வித்தீயாய்
வளர்க்கும் அலட்சிய
அணுகல்கள்...

சமுதாய அநீதிகளை
தட்டி கேட்க
எனக்கு நானே
சூளுரைப்பேன்
எனக்கு என்னைப்
பிடித்திருந்தால்
போதுமென்று
அறியாமலே!

4 comments:

said...

நல்லா இருக்கு ரமேஷ்..

நமக்கு நாமே பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கு...ஹ்ஹ்ம்ம்..

said...

வழக்கம் போல் உங்கள் வருகைக்கு நன்றி.

சமுதாயத்தை துப்புரவாக வைத்துக் கொள்ளும் மனப்பான்மை நமக்கு வரவேண்டும் என நினைத்து எழுதிய வரிகள்.

said...

உண்மைகள் சுடுகின்றன்....

said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சாரல் அவர்களே.