Thursday, March 22, 2007

வசந்தத்தின் திறப்பு விழா

(மிச்சிகன் தமிழ்சங்கத்தின் 'கதம்பம்' இதழில் பிரசுரமாகவுள்ள கவிதை)

வர்ணம் பூசி காதலுக்கு
வாழ்த்துச் சொன்ன
பூக்களெல்லாம்
சிரித்துக் கொண்டே
மரித்துப் போக
கையசைத்து வரவேற்ற
தோட்டமரக் கிளைகளெல்லாம்
பழனி மலை பக்தன் போல
மொட்டையாய் வீற்றிருக்கும்...

பிரிதலின் துக்கத்தை
எச்சிலாய் விழுங்கிவிட்டு
மௌனமாய் பார்த்திருக்கும்
மொட்டை மரங்கள்
தன் மேனி தொட்டு
பறவைகள் கொஞ்சும்
நாட்களை நோக்கி
காலியாய் காத்திருக்கும்...

மருமகளின் வீட்டிற்கு
கோபமாய் வந்திறங்கி
நடுக்கம் கொடுக்கும்
மாமியார் போல
கடுங்குளிரின் ஆட்சியிலே
மிச்சிகனின் சுதந்திரம்
மொத்தமாய் பறிபோகும்...

ஊரையே மூடியிருக்கும்
ஒற்றை போர்வையொன்று
வெள்ளியாய் மின்ன
நெய்தவன் யாரென்று
கேட்கத்தான் ஆளில்லை...

மாதங்கள் ஓடியபின்
காலத்தின் கதவுகளில்
மெதுவாய் ஒலிக்கும்
வசந்தத்தின் தட்டல்கள்...
கார்மேகத்தின் கைப்பிடியிலிருந்து
மெல்ல நழுவும்
நிலவு போலே
ஆதவனின் அரவணைப்பில்
வெட்கமாய் உருகியோடும்
பனித்துகள்கள்...

வரவேற்பு கீதமாய்
வாசலெங்கும் ஒலிக்கும்
பறவைகளின் இசைகள்...
வழியெங்கும் மலர் தூவி
கரத்தினிலே பச்சைக்கொடி
ஏந்தி நிற்கும் மரங்கள்...
பூக்களைக் காதலிக்க
மெல்லமாய் ரீங்காரம்
பாடும் வண்டுகள்...
பூங்கா திடல்களிலே
சத்தமிட்டு அங்குமிங்கும்
ஓடியாடும் பிள்ளைகள்...

மகிழ்ச்சி இசை
எங்கும் பரவ
மணிகளை அடித்து
வாழ்த்துகீதம் பாடிவரும்
வசந்தம் வருகிறது
அதோ! அதோ!
ஒன்றுகூடி வரவேற்போம்
இந்த மார்ச் மாதத்திலே!!

5 comments:

said...

நீங்கள் கொடுத்த தகவலுக்கு நன்றி சேதுக்கரசி.

---------------------------------
பரிசு எவ்வளவு ? 10000 பொற்காசுகளா?

ஐயோ! இந்த தருமிக்கே அது கிடைக்கணும்...சொக்கா...சொக்கா..:-))

---------------------------------

said...

10000 பொற்காசுன்னு சொல்லமுடியாது.. எதுக்கும் அறிவிப்பைப் பாருங்க :-)

said...

நண்பியே,

உங்கள் நினைவூட்டலுக்கு நன்றி. நான் கவிதைகள் எழுதுவது எந்த குறிக்கோள்களையும் மனதில் கொண்டு அல்ல. என் மனதில் அவ்வப்போது பொங்கியெழும் சிந்தனைகளுக்கு கவிதைகள் ஒரு நல்ல வடிகாலாக அமைவதாலே. உணர்ச்சி வெளிப்பாடுகள் கொண்ட எல்லா எழுத்துக்களுமே நல்ல கவிதைகள் என்பது என் கருத்து. போட்டி வைத்து ஒரு கவிதை மேல் ஒரு கவிதை கீழ் என்று தரம் பிரிப்பதில் எனக்கு உடன் பாடு இல்லை. என்னைத் தவறாக நினைக்க வேண்டாம்.

அதே சமயம், பொறுப்பாக எனக்கு அறிவிப்பை நினைவூட்டிய உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.

நன்றியுடன்
யாழினி அத்தன்

said...

அப்படியே ஆகட்டும் :-)

said...

:-))