Sunday, May 31, 2009

இசைஞானிக்கு என் சமர்ப்பணம்


ஆள் அரவமில்லாத
அடர்ந்த காட்டுக்குள்ளே
திக்குத் தெரியாமல்
அலையும் ஊதக்காற்றிற்கு
உன் புல்லாங்குழல்தானே
முகவரி தந்தது.

தப்பை மூங்கிலுக்குள்ளே
காற்றின் நர்த்தனம்.
உருவெடுத்த இசைக்கு
உயிர் கொடுத்தது
நீயா? நானா? என்ற
அறியாமைச் சண்டைவேறு
நீயில்லாத நேரத்தில்!

முறுக்கேறிய கம்பியிழைகள்
இளமை ததும்பும்
புதுக்காதலி போல
மரப் பேழையோடு
வெட்கம்விட்டு
கொஞ்சி குலாவ
உருவான பாட்டுகளில்
சொக்குகின்ற காதல்ரசங்கள்!

உன் தாலாட்டுகளில்
உறங்கிப்போன குழந்தகளெல்லாம்
இன்று
தத்தம் குழந்தைகளை
உறங்க வைக்க
அதே தாலாட்டை
தேடி அலையும்
ரகசியம் சொல்வாயோ?

சோகம் சுமந்து
சாகும் மனிதனெல்லாம்
உன் கீதங்களை
கேட்டு
மனக் கவலைகளை
தூர வீசிவிட்டு
சிரித்துக் கொண்டுதானே
சாகின்றான்.

அன்றாடங் காய்ச்சிக்கு
பாதி வயிறு
நிரம்பிய நாட்களிலே
உன் பாட்டுத்தானே
மீதி வயிற்றை
நிரப்பும்.

உருகாத மெழுகாய்
நின்ற
கர்நாடக ராகங்கள்
உன் இசையொளி
முன்னால் உருகிப்போக
அதனால்
ஒளி பெற்றதென்னவோ
எம்
தமிழ்நாட்டு கிராமங்கள்தான்.

உன் ஓராயிரம்
பாட்டுகளை ஓயாமல்
ஒலித்து மகிழ்ந்த
ஒலிப் பேழைகளெல்லாம்
தன் வாய்வலித்து
மறந்ததைக் கூட
எவரிடமும் சொல்வதில்லை!

சிம்பொனித் தமிழனே!

எங்கள் பயணங்கள்
எங்கே முடியுமோ
அதுவரை
கொண்டு செல்லும்
எங்கள் இதயத்தோடு
ஒட்டிப் போன
உன் அதிர்வலைகள்!

Friday, May 29, 2009

ஒரு முடத்தென்னைமரத்தின் மௌன விசும்பல்கள்


கீழைக் காற்றில்
தலையசைத்து ஆடினேன்
எறிகுண்டு ஒன்று
என்மேல் விழும் வரை.

போராளிகளின் மண்ணில்
நானும் ஓர் போராளி என்று
எறிகுண்டு வீசி
என் கைகளை உடைத்தானோ?

என் நிழல்தனில்
கைவீசி விளையாடிய
குழந்தைகள் எங்கே?
கதை பேசி காலந்தள்ளிய
முதியவர் எங்கே?
வீரமுழக்கச் சபதங்கள் செய்த
வீரர்கள் எங்கே?
காற்றின் அதிர்வலையில்
நித்தம் உம் கானங்களை
கேட்டுத்தான் கரைகின்றன
என் தினங்கள்.

எனை வார்த்து
உம் உயிர் வளர்த்தேன்
என்ன கொடுமை?
இன்று
உமைத் தின்றல்லவோ
நான் வாழ்கின்றேன்.

உம் உடல் முழக்கங்ளை
வெடிகுண்டுகள் வெல்லலாம்.
நித்தம்
நான் கேட்கும்
உம்
ஆவி முழக்கங்களை
எப்படி எதிரி
நிறுத்தப் போகிறான்?

ஓநாய் சபையில்
நீதி கேட்டீர்
ஒரு
ஆட்டுக் குட்டியாய்.
அத்தனைக்கும் சாட்சியாய்
நின்று
வேதனைத் தீயில்
வெந்து சாகின்றேன்
என் முடிவில்லா
மௌனத்தை நினைத்து.

ஆயிரமாயிரம் உயிர்கொன்று
அசோகன் புத்தம் பற்ற
இன்று
அவன் தந்த
புத்தமல்லவோ ஆயிரமாயிரம்
உயிர் வாங்குகிறது.

நீதிகளைத் தின்று
அநீதிகளை கொன்று
கோடி வருடங்கள்
உடல் வளர்த்த
காலம்
உமக்கும் ஒரு பதில்
கொண்டிருக்கலாம்.

இங்கே நான் அநாதையாக
அங்கே நீ அநாதையாக
நாளை
நம் பிள்ளைகளாவது
கூடிக் குலாவும்
என்ற
பட்சிகளின் கதைப்பேச்சில்
இன்னும்
செத்துப் போய்விடவில்லை
என் நம்பிக்கை!

Monday, May 25, 2009

கடவுள் எங்கே??


இமைகள் மூடிய
ஆழ நித்திரையில்
இதயத்தினுள்ளே எழும்பும்
குரல்களால் அரங்கேறும்
கனவுப் படலங்கள்.
இமைகள் பிரிந்தபோதும்
கனவுகள் பொசுங்கியபோதும்
கோபமேதும் வரவில்லை
காலைச் சூரியன்மேல்

சட்டைப்பையில் நிரம்பி
வழிந்த சிறுவெள்ளத்தை
கைகொண்டு பிதுக்கி
ஊசிப்போய் கிழிந்துபோன
பண முகப்பை
விசிறிக் காற்றில்
காயவைத்த போதும்
வெறுப்பேதும் வரவில்லை
கோடைக்கால இடிமழைமேல்

தூரதேசம் கடந்துபோய்
ஆண்டுகள் பலவோடி
நரைத்த தலையுடன்
உப்பிய முகத்துடன்
மறவாத நட்புகொண்ட
பள்ளி நண்பனோடு
பூங்கா தரையில்
சாவகாசமாய் கதைபேச
கால்சட்டையின் பின்புட்டத்தில்
ஒட்டிகொண்ட ஈரத்தால்
எதிர்ப்பேதும் வரவில்லை
பசேலென்ற புல்வெளிமேல்.

எதையெதையோ தேடித்தேடி
எங்கெங்கோ ஓடிப்போய்
அவலப்பட்டு நிற்கும்
வாழ்க்கையில் விஞ்சி
நிற்கும் அற்புதங்கள்
தெரிய வாய்ப்பில்லைதான்.
அதனாலே,
கத்தியை பையில்
வைத்துக் கொண்டு
கடவுளை பேசுபவர்
பின்னாலே கைகட்டி
நிற்கிறது மந்தைக் கூட்டம்.
பாதையெல்லாம் ரத்தம்
படிந்த பின்னும்
பயணத்தில் மாற்றமேதுமில்லை

தீர்க்கமாய் புரிந்தவன் மட்டும்
மெளனமாய் ரசிக்கின்றான்
அவலத்தினுள்ளேயும் அற்புதங்களை.