Tuesday, May 8, 2007

தமிழ்மணத்தில் 40-க்கு மேல் பின்னூட்டம் வாங்குவது எப்படி?

இந்த சூட்சுமத்துக்கு விடை தெரியாமலா இத்தனை நாள் முழித்தேன்? :-0

40 க்கு மேல பின்னூட்டம் வாங்கினா தமிழ்மணத்தில் சிறப்பு கவனிப்பு இருப்பதால் அப்படி வாங்குவதற்கான ரகசியத்தை இங்கே போட்டு உடைக்கிறேன். எல்லாருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையோடு!

ஒரு சின்ன கணக்கு. பயப்பட வேண்டாம். 2-ம் வகுப்பு படிச்சிருந்தா போதும். ;-))

x = உங்க தற்போதய வயசு

y = 40 - x

உதாரணமா உங்க வயசு 28-ஆக இருந்தா,

y = 40 - 28 = 12

அப்போ, 40-ஐ தொட 12 வருடங்கள் பொறுத்திருக்கனும்.

40 வயச தொட்டதுக்கப்புறம் வாங்கற பின்னூட்டங்களெல்லாம், 40 க்கு மேல் வாங்கறதுதானே?

ரொம்ப காலம் விஞ்ஞானியா இருந்து கண்டுபிடிச்ச சூத்திரம். எஞ்ஜாய் பண்ணுங்க தோழர்களே!

Sunday, May 6, 2007

கவிதைகளை பிழைக்கவிடு!

வைக்கோல் போரினூடே
சிதறிக் கிடக்கும்
நெற்மணி துளிகளை
கொத்தி கொத்திப்
பொறுக்கும் பசிதாக்கமுற்ற
பட்சியாய்
தெரிவான வார்த்தைகளை
தொடுத்து நையப்பட்ட
கவிதையில்
விரல் இடுக்கினிடையே
கொம்புத் தேன்
ரசமாய் உருகி
வழியும் என் காதல்.

படிக்க நீ மறுத்தும்
ஒவ்வொரு வரியும்
உனைப் படிக்கும் புத்தகமாய்
செவிகளை நீ மூடிக்கொண்டும்
ஒவ்வொரு சொல்லும்
உனை ஒலிக்கும் சாகரமாய்
கண்களால் நீ உதாசீனத்தாலும்
உன் பேரழகை பதிவிக்கும்
வர்ணஜால ஓவியமாய்
காதலை நீ மரணித்தாலும்
அது உயிர்வாழும் அரும்படைப்பாய்
என் கவிதைகள் சீவித்திருக்க,
உன் மௌனத்தைக் கலைத்து
இல்லையென்று சொல்லி
என் காதலைக்
கொல்வதை விட
ஒரு பேசா மடந்தையாய்
இருந்துவிட்டுப் போ.
என் கவிதைகளாவது
பிழைத்துப் போகட்டும்!

Thursday, May 3, 2007

கடற்கரை இதிகாசம்

அதீத நடைக்களைப்பில்
பயணிக்கும் பேரலைகள்
கரைகளை வருடி
நுரைகளை உமிழ
புதிதாய் பிறப்பெடுக்கும்
குமிழிகளோடு காதலும்.
விளிம்புகள் அஸ்தமித்து
வாயுக்கள் சங்கமிக்க
கண்ணாடிச் சுவர்களில்
பிரதிபலிக்கும் எல்லையில்லா
அந்திவானம் இணைந்த
இதயங்களின் எதிர்பார்ப்பு
மனமோ?
தன்னந்தனியே உலவி
யாரோடும் சேராது
சிலிர்த்துத் தெறிக்கும்
கண்ணாடி மொட்டுக்களின்
பிம்பங்களில் தொக்கி
வீணாகி நின்ற
பாழான காதல்கள்.
இப்படி அனுப்பொழுதும்
கடற்கரை கட்டும்
காதல் இதிகாசத்தில்
எல்லார் கதைகளும்
ஏதோவொரு பக்கத்தில்.
மேடு குழிகளுமாய்
திக்கற்று விரவிக்கிடக்கும்
மணல்பரப்பின் சுவடுகள்
காதல் நெஞ்சங்களின்
கனவுகளை சுமந்தபடி.
அலைகளின் முதுகை
வருடிவரும் காற்று
கரைதாண்டி மெல்ல
மௌனங்களை விற்றுச்
செல்ல ஸ்பரிசங்களில்
பிரவாகிக்கும் வார்த்தைமேல்
சுண்ணம் பூசி
சலசலக்கும் அலையோசைகள்.
இடைவெளி விட்டு
அமர்ந்தாலும் இதயங்களின்
அரவணைப்பை வெளிப்படுத்தும்
அர்த்தமில்லா மணல்கிறுக்கல்கள்.
தன்னிலை மறந்து
காதலர் சுயங்களை
உரசிப் பார்க்கும்
ஒவ்வொரு துளிப்பொழுதும்
எட்டிப் பார்க்கும்
சின்ன்ஞ்சிறு ஜென்துறவிகள்!