Thursday, May 3, 2007

கடற்கரை இதிகாசம்

அதீத நடைக்களைப்பில்
பயணிக்கும் பேரலைகள்
கரைகளை வருடி
நுரைகளை உமிழ
புதிதாய் பிறப்பெடுக்கும்
குமிழிகளோடு காதலும்.
விளிம்புகள் அஸ்தமித்து
வாயுக்கள் சங்கமிக்க
கண்ணாடிச் சுவர்களில்
பிரதிபலிக்கும் எல்லையில்லா
அந்திவானம் இணைந்த
இதயங்களின் எதிர்பார்ப்பு
மனமோ?
தன்னந்தனியே உலவி
யாரோடும் சேராது
சிலிர்த்துத் தெறிக்கும்
கண்ணாடி மொட்டுக்களின்
பிம்பங்களில் தொக்கி
வீணாகி நின்ற
பாழான காதல்கள்.
இப்படி அனுப்பொழுதும்
கடற்கரை கட்டும்
காதல் இதிகாசத்தில்
எல்லார் கதைகளும்
ஏதோவொரு பக்கத்தில்.
மேடு குழிகளுமாய்
திக்கற்று விரவிக்கிடக்கும்
மணல்பரப்பின் சுவடுகள்
காதல் நெஞ்சங்களின்
கனவுகளை சுமந்தபடி.
அலைகளின் முதுகை
வருடிவரும் காற்று
கரைதாண்டி மெல்ல
மௌனங்களை விற்றுச்
செல்ல ஸ்பரிசங்களில்
பிரவாகிக்கும் வார்த்தைமேல்
சுண்ணம் பூசி
சலசலக்கும் அலையோசைகள்.
இடைவெளி விட்டு
அமர்ந்தாலும் இதயங்களின்
அரவணைப்பை வெளிப்படுத்தும்
அர்த்தமில்லா மணல்கிறுக்கல்கள்.
தன்னிலை மறந்து
காதலர் சுயங்களை
உரசிப் பார்க்கும்
ஒவ்வொரு துளிப்பொழுதும்
எட்டிப் பார்க்கும்
சின்ன்ஞ்சிறு ஜென்துறவிகள்!

2 comments:

said...

\\இடைவெளி விட்டு
அமர்ந்தாலும் இதயங்களின்
அரவணைப்பை வெளிப்படுத்தும்
அர்த்தமில்லா மணல்கிறுக்கல்கள்\\

அப்படியா...? அப்படித்தான் இருக்கவேண்டும். மனக்கிறுக்கல்களால் உருவாகும் மணல்கிறுக்கல்கள். என்ன சில நாட்களாய் காணவில்லை உங்களை?

said...

தமிழ்நதி,

பணி நிமித்தமாக சில தொலைதூர பயணங்கள். தமிழ்மண நண்பர்களின் படைப்புகளை படிக்க முடியாமல் போனது என் போறாத காலம். இன்னும் சில பயணங்கள் காத்திருப்பதை நினைக்கும்போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

உங்களின் புதிய படைப்புகளை சீக்கிரம் படிக்க ஆவலாக இருக்கிறது.