Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, December 2, 2012

பார்வை வடு

உன்
கருவிழி அம்பு கொண்டு
என் இதயம் கிழித்தாய்,
உதிரம் காயமல்
உயிர் வாழ்கிறது
இன்னும்.

நீ மௌனம் கலைப்பாய்
என்று
நான் மௌனமாய் இருந்தேன்
நான் மௌனம் கலைப்பேன்
என்று
நீயும் மௌனம் கொண்டாயோ?

அர்த்தமற்று போனது
என் பேச்சுக்கள்
சில கணங்களில்.
என் நண்பர்களுக்கு தெரியாது
நீ கடந்து போகிறாய்
என்று.

என் உயிர் நண்பன் கூட
எதிரியாக போனான்
நீ அவனோடு
ஏதோ பேசிய போது.

சொல்லாமல்
மறைந்து போனாய்
ஒரு நாள்.
உன் காயத்தை மட்டும்
அப்படியே
என் நெஞ்சில்
 மறந்து விட்டுவிட்டு.

ஆண்டுகள் போயும்
வலியால் அவதிப்படுகிறேன்
அவ்வப் போது.
ஆனாலும்,
சுகமாய்த்தான்
இருக்கிறது.

அதனால்,
நன்றியோடு சொல்கிறேன்
நீ வேண்டாம்
நீ கொடுத்த
இந்த வலி போதும்
சாகும் வரைக்கும்!


Saturday, December 1, 2012

ஒரு மழையில் மனது

நீல தேவதை
முகம் கருத்தாள்
பூமியெங்கும்
மண்வாசனை!

முன்னிரவு நிசப்தம்
முழுதாய் கரைத்து
இமைகளை சாத்தி
இதயம் விழிக்கச்செய்த
தவளைகளின் அதறல்கள்.

தண்ணீரில் மிதக்கும்
காகித படகில்
சுமையாய் வீற்றிருக்கும்
குழந்தையின் மகிழ்ச்சி.

துள்ளித்தெறித்த
திவலைகளின் மோதலில்
உடைந்து பிறக்கும்
கண்ணாடிக் குமிழிகள் .

பச்சைமேனியில்
படர்ந்திருக்கும்
துளிகளில் ஒளிரும்
ஆயிரம் சூரியன்கள்.

தெருக்களின்  ஈரம்
என் இதயத்தில்
வரவில்லை
இன்னும்.

ஊரெங்கும் வெள்ளம்
வீடுகள் படகாக
படகுகள் வீடாக
குத்திட்ட கண்கள்
காத்திருந்தது
தொலைகாட்சியில்
அந்த ஒரு
செய்திக்கு மட்டும்.
"நாளை விடுமுறை"

Monday, November 19, 2012

மனைவி

மெழுகாய் 
உருகினாள் 
அவள்.
ஒளியில் 
திளைத்தது 
வீடு.


Sunday, November 11, 2012

பயணம்

அன்று...

மறுத்தேன்
இதயச் சுவர்களின்
ஈர
அகவல்களை...

பிரிந்தேன்
வளர்த்து சேர்த்த
பாச
உறவுகளை...

6 டன்
கனவுகளை
சுமந்த
என்
60 கிலோ
உடலுடன்...

பறந்தேன்
ஒரு
புரியாத உலகம்
நோக்கி...

இன்று ...

துளித் துளியாய்
உருமாறிப்
போயின என்
உறவுகளெல்லாம்...

மறைந்தன சில
மறந்தன சில
பிறந்தன சில
சேர்ந்தன சில

இதய வலிகளை
சன்ன சன்னமாய்
மழுங்கடித்த
அந்நிய நோட்டுகளும் ...

பழைய கனவுகளை
வேக வேகமாய்
கப்பலேற்றிய
புதிய பணங்களும் ...

கைநிறைய  இருந்தும்

பாழாய்ப்போன
இந்த
தேடல்  மட்டும்
இன்னும்
தொலையவில்லை...

சன்னலில்
பறந்துபோன
டிக்கெட்டாய்,
மறைந்துபோன
என்
போலியற்ற
அடையாளம்...

கனவுக் குமிழிக்குள்
மூர்ச்சையில்லாமல்
அடைந்து கிடக்கும்
என்
உண்மை முகவரி...

சூழ்நிலைச்
சங்கிலியென்னும்
கால்விலங்கு போட்டு
கைதியான  என்னை
கால அரசன்
கட்டி
இழுத்துச் செல்ல

போகும் பாதையில்
எங்கோ
கிடக்கும்
என்றொரு
குருட்டு
நம்பிக்கையோடு...

தள்ளாடி
பயணிக்கிறேன்
மெது மெதுவாய்!
எல்லை
இன்னும்
வெகு  தூரமில்லை,
ஆனாலும்...


Wednesday, January 6, 2010

நீ வருவாயென


ஒரே பக்கத்தை பத்து முறை
புரட்டிவிட்டேன்
நீ எங்கு இருக்கிறாய்?

நடக்கும் பாதையை
பார்த்து சலித்துவிட்டேன்
பரவியிருந்த நறுமணக்
கவழல் மரித்து நாளாகிவிட்டது

ஊர் கதைகள் மென்றபடி
தலை விலக்கி நோக்கினால்
மெதுவாய்ப் பயணிக்கிறார்கள்
உன் தோழிகள்

மிதிவண்டி
இப்படியும் அப்படியும்
செல்கிறது
உன் தங்கை
அனாசயமாக ஓட்டுகிறாள்

ஒரு வலிக்கு மருந்து
இன்னொரு காயம்
என்று சொல்கிறார்கள்
நீ இருந்ததைவிட
இப்போது அதிகமாய்
வலிக்கிறது என்று
தெரியாமல்.

பொறுமையாய் காத்திருக்கிறேன்
ஒரு குறிஞ்சிப் பூவைப்போல.
ஏனெனில்
நிஜசாயம் பூசப்பட்ட
பொய் பொம்மைகள்
வெளிறிவிடும் ஒருநாள்
என்ற நம்பிக்கையில்.

கிறுக்கன் என்று
கைசுட்டுவதில்லை
யாரும் இப்போதெல்லாம்!

Wednesday, June 3, 2009

புகைத்தலின் பெண்மை


அன்று
தொலை நிலவாய்
தூர நின்று சிரித்தாய்
பின்
கொளுத்தெரிந்த என்
காம இச்சைக்கு
பலியானாய்

இன்று
நாளற உனை
பத்துமுறையாவது
முத்தமிடுகிறேன்
சில நேரம்
என் சொந்தக்
காதலி
முன்னாலே
இருந்தாலும்
போதவில்லை

மறந்துவிட அவள்
இறைஞ்சியும், அழுதும்
மறுத்துவிட்டேன்
தீர்க்கமாய்
உனை மறக்க

அடுத்தவனுக்கில்லை
என்னின்பம் என்று
அனுபவித்தபின்
அநியாயமாய்
எரித்து
மீதமுள்ள
குற்றுயிரையும்
காலால் பறிக்கிறேன்

ஒரு தூக்கு தண்டனை
தியாகி போல
நீயும்
மெளனமாய்
ஏற்றுக் கொள்கிறாய்

இருந்தும் என்ன?
கடவுளுக்கா உன்னை
காணிக்கை
செய்யப் போகிறார்கள்
இந்த மானுட
ஜென்மங்கள்

அமைதியான
வீட்டுக்குள்
இன்று நடந்த
அந்த அரங்கேற்றம்

கண்மூடிய
தங்கை
கலைந்து போன
அனுபவிப்பில்
நான்
அரைகுறையாய்
ஆதரவேதுமற்று

இனி அம்மா
அப்புறம் அப்பா
ஒவ்வொருவராய்
உன்னை
முழுகச் சொல்வார்கள்
முடிந்தால்
கண்ணீர் விட்டு
கதறுவார்கள்

தெரியட்டும் அவர்களுக்கும்
நம் காதலின் ஆழம்
என்னவென்று.
பின்
விட்டுவிடுவேன்
இந்த
திருட்டு அங்கீகாரத்தை
ஆனால்
உன்னை மட்டுமல்ல!

Sunday, May 31, 2009

இசைஞானிக்கு என் சமர்ப்பணம்


ஆள் அரவமில்லாத
அடர்ந்த காட்டுக்குள்ளே
திக்குத் தெரியாமல்
அலையும் ஊதக்காற்றிற்கு
உன் புல்லாங்குழல்தானே
முகவரி தந்தது.

தப்பை மூங்கிலுக்குள்ளே
காற்றின் நர்த்தனம்.
உருவெடுத்த இசைக்கு
உயிர் கொடுத்தது
நீயா? நானா? என்ற
அறியாமைச் சண்டைவேறு
நீயில்லாத நேரத்தில்!

முறுக்கேறிய கம்பியிழைகள்
இளமை ததும்பும்
புதுக்காதலி போல
மரப் பேழையோடு
வெட்கம்விட்டு
கொஞ்சி குலாவ
உருவான பாட்டுகளில்
சொக்குகின்ற காதல்ரசங்கள்!

உன் தாலாட்டுகளில்
உறங்கிப்போன குழந்தகளெல்லாம்
இன்று
தத்தம் குழந்தைகளை
உறங்க வைக்க
அதே தாலாட்டை
தேடி அலையும்
ரகசியம் சொல்வாயோ?

சோகம் சுமந்து
சாகும் மனிதனெல்லாம்
உன் கீதங்களை
கேட்டு
மனக் கவலைகளை
தூர வீசிவிட்டு
சிரித்துக் கொண்டுதானே
சாகின்றான்.

அன்றாடங் காய்ச்சிக்கு
பாதி வயிறு
நிரம்பிய நாட்களிலே
உன் பாட்டுத்தானே
மீதி வயிற்றை
நிரப்பும்.

உருகாத மெழுகாய்
நின்ற
கர்நாடக ராகங்கள்
உன் இசையொளி
முன்னால் உருகிப்போக
அதனால்
ஒளி பெற்றதென்னவோ
எம்
தமிழ்நாட்டு கிராமங்கள்தான்.

உன் ஓராயிரம்
பாட்டுகளை ஓயாமல்
ஒலித்து மகிழ்ந்த
ஒலிப் பேழைகளெல்லாம்
தன் வாய்வலித்து
மறந்ததைக் கூட
எவரிடமும் சொல்வதில்லை!

சிம்பொனித் தமிழனே!

எங்கள் பயணங்கள்
எங்கே முடியுமோ
அதுவரை
கொண்டு செல்லும்
எங்கள் இதயத்தோடு
ஒட்டிப் போன
உன் அதிர்வலைகள்!

Friday, May 29, 2009

ஒரு முடத்தென்னைமரத்தின் மௌன விசும்பல்கள்


கீழைக் காற்றில்
தலையசைத்து ஆடினேன்
எறிகுண்டு ஒன்று
என்மேல் விழும் வரை.

போராளிகளின் மண்ணில்
நானும் ஓர் போராளி என்று
எறிகுண்டு வீசி
என் கைகளை உடைத்தானோ?

என் நிழல்தனில்
கைவீசி விளையாடிய
குழந்தைகள் எங்கே?
கதை பேசி காலந்தள்ளிய
முதியவர் எங்கே?
வீரமுழக்கச் சபதங்கள் செய்த
வீரர்கள் எங்கே?
காற்றின் அதிர்வலையில்
நித்தம் உம் கானங்களை
கேட்டுத்தான் கரைகின்றன
என் தினங்கள்.

எனை வார்த்து
உம் உயிர் வளர்த்தேன்
என்ன கொடுமை?
இன்று
உமைத் தின்றல்லவோ
நான் வாழ்கின்றேன்.

உம் உடல் முழக்கங்ளை
வெடிகுண்டுகள் வெல்லலாம்.
நித்தம்
நான் கேட்கும்
உம்
ஆவி முழக்கங்களை
எப்படி எதிரி
நிறுத்தப் போகிறான்?

ஓநாய் சபையில்
நீதி கேட்டீர்
ஒரு
ஆட்டுக் குட்டியாய்.
அத்தனைக்கும் சாட்சியாய்
நின்று
வேதனைத் தீயில்
வெந்து சாகின்றேன்
என் முடிவில்லா
மௌனத்தை நினைத்து.

ஆயிரமாயிரம் உயிர்கொன்று
அசோகன் புத்தம் பற்ற
இன்று
அவன் தந்த
புத்தமல்லவோ ஆயிரமாயிரம்
உயிர் வாங்குகிறது.

நீதிகளைத் தின்று
அநீதிகளை கொன்று
கோடி வருடங்கள்
உடல் வளர்த்த
காலம்
உமக்கும் ஒரு பதில்
கொண்டிருக்கலாம்.

இங்கே நான் அநாதையாக
அங்கே நீ அநாதையாக
நாளை
நம் பிள்ளைகளாவது
கூடிக் குலாவும்
என்ற
பட்சிகளின் கதைப்பேச்சில்
இன்னும்
செத்துப் போய்விடவில்லை
என் நம்பிக்கை!

Monday, May 25, 2009

கடவுள் எங்கே??


இமைகள் மூடிய
ஆழ நித்திரையில்
இதயத்தினுள்ளே எழும்பும்
குரல்களால் அரங்கேறும்
கனவுப் படலங்கள்.
இமைகள் பிரிந்தபோதும்
கனவுகள் பொசுங்கியபோதும்
கோபமேதும் வரவில்லை
காலைச் சூரியன்மேல்

சட்டைப்பையில் நிரம்பி
வழிந்த சிறுவெள்ளத்தை
கைகொண்டு பிதுக்கி
ஊசிப்போய் கிழிந்துபோன
பண முகப்பை
விசிறிக் காற்றில்
காயவைத்த போதும்
வெறுப்பேதும் வரவில்லை
கோடைக்கால இடிமழைமேல்

தூரதேசம் கடந்துபோய்
ஆண்டுகள் பலவோடி
நரைத்த தலையுடன்
உப்பிய முகத்துடன்
மறவாத நட்புகொண்ட
பள்ளி நண்பனோடு
பூங்கா தரையில்
சாவகாசமாய் கதைபேச
கால்சட்டையின் பின்புட்டத்தில்
ஒட்டிகொண்ட ஈரத்தால்
எதிர்ப்பேதும் வரவில்லை
பசேலென்ற புல்வெளிமேல்.

எதையெதையோ தேடித்தேடி
எங்கெங்கோ ஓடிப்போய்
அவலப்பட்டு நிற்கும்
வாழ்க்கையில் விஞ்சி
நிற்கும் அற்புதங்கள்
தெரிய வாய்ப்பில்லைதான்.
அதனாலே,
கத்தியை பையில்
வைத்துக் கொண்டு
கடவுளை பேசுபவர்
பின்னாலே கைகட்டி
நிற்கிறது மந்தைக் கூட்டம்.
பாதையெல்லாம் ரத்தம்
படிந்த பின்னும்
பயணத்தில் மாற்றமேதுமில்லை

தீர்க்கமாய் புரிந்தவன் மட்டும்
மெளனமாய் ரசிக்கின்றான்
அவலத்தினுள்ளேயும் அற்புதங்களை.

Saturday, May 10, 2008

ஆதலினால் காதல் செய்வீர்!


ஈரெட்டு வருடங்கள்
இனிதாய் போனபின்
இதயத்தின் கதவுகள்
மெதுவாய் தட்டப்பட
இயற்கையின் கையில்
நான் கண்டதோ
"காதல்" என்னும்
அழகிய திறவுகோல்.
"வெளியே போ"வென
துரத்தவும் திறனில்லை
"உள்ளே வா"வென
சொல்லவும் மனமில்லை
"யார் நீ?"
இதயம் வினவ,
"நான்தான் அன்பு"
மெலிதாய் ஒலித்தது.
"அனுப்பியது யார்?"
விடவில்லை இதயம்.
"கடவுள்" என்று
கருணையாய் சொல்ல,
பயமொன்று மறுத்தது
கழுத்தில் கைவைத்து
வெளியே தள்ள.

இறைவன் வரப்பிரசாதம்
இளமையின் அழகாய்.
ஈடொன்றும் இல்லை
இளநீரின் சுவைக்கு.
கூடித் தெரியுமது
வெயிலின் வேட்கையில்.
மல்லிகை நறுமணம்
இளம் மொட்டிலே.
வனப்படும் இவ்வுலகம்
காதல் இளநெஞ்சிலே.


சாதியில்லை பேதமில்லை
மொழியில்லை மதமுமில்லை
எல்லாருக்கும் "அவன்"
தந்த காதலுணர்வு
"பம்பர் பரிசாய்"!

அன்புக்கில்லை அடைக்குந்தாழ்
சரியாய் செப்பினான்
தமிழ் முனி!
ஆக,
பூட்டி வைக்காதே
இதயக் கதவுகளை.
தூர எறிந்துவிடாதே
இறைவனின் பரிசை.

ருசி அறிக
காதலின்!
கனிவு பிறக்கும்
கண்களில்!
கவிதை பொழியும்
சொற்களில்!
இசையமுது பாயும்
செவிகளில்!

காதல் வெல்ல
இதயம் வெல்லும்!
இதயம் வெல்ல
நேயம் வெல்லும்!

ஆதலினால்
காதல் செய்வீர்!!

Friday, May 2, 2008

கனவுகள்

இவன் "மருத்துவன்"
என்று அப்பா
இவன் "விமானி"
என்று அம்மா
இவன் "விஞ்ஞானி"
என்று சுயமாய்
கட்டிக் கொண்ட
வீடுகள் எல்லாம்
ஏதோ ஒரு
வினோத அலையின்
விஷ வருடலில்
காணாமல் போக,
அப்பா கரையில்
ஒரு சில
அம்மா கரையில்
ஒரு சில
என் கரையில்
ஒரு சிலவென
மிஞ்சிப் போனதில்
தொனித்திருந்த
அந்த "நம்பிக்கை";
அதனால்,
கரைந்து போன
வீடுகளைப் பற்றி
சற்றும் கவலைப்படாமல்
சளைக்காமல் கட்டினோம்;
இதோ,
என் கரையில்
மொட்டு மொட்டாய்
பூத்திருக்கும் வீடுகள்;
இவை என்
பிள்ளையின் கனவுகள்;
துவண்டு வந்த
அலைகள் கொஞ்சமாய்
கரைத்தும் எஞ்சியிருக்கும்
வீடுகளின் மேல்
சொர்க்கமாய் பயணிக்கிறது
இந்த வாழ்க்கை!

Sunday, March 23, 2008

இன்னொரு பாரதி தேவையில்லை!

வைகறைப் பொழுதில்
நித்திரைத்திருக்கும் மலைமேல்
இறுக்கமாய் படர்ந்திருக்கும்
வெண்பனியின் மூட்டத்தினூடே
வெள்ளி நீர்வீழ்ச்சியாய்
கொட்டித் தீர்த்த
தெய்வீக மழலையின்
மாசில்லா வாய்மொழியென்ற
"பிள்ளைத்தமிழும்"
மறைந்து போய்,

பூத்துக் குலுங்கும்
பூங்காவினூடே கவிழும்
செண்பக நறுமணத்தில்
லயித்து மயக்கமுற்ற
மனம் போல்
கொஞ்சிய காதலியின்
கற்கண்டுத் தமிழை
சுவைத்து சுவைத்துக்
காதலில் தன்னைத்
தொலைத்து விட்ட
"அகநானூற்றுக் காதலர்"களும்
காணாமல் போய்,

சொட்டு விஷமாய்
உயிரீறும் வாளாய்
செந்தமிழுக்குள்ளே நையக்
கலந்து போய்விட்ட
ஆங்கிலச் சொற்கள்.
கூடுகிறது குப்பை
நாறுகிறது தமிழ்வீதி
அவரவர் வீட்டுக்
குப்பைகளை அவரவர்
கையால் வழித்தெறிய
இன்னொரு பாரதி தேவையோ?

Sunday, May 6, 2007

கவிதைகளை பிழைக்கவிடு!

வைக்கோல் போரினூடே
சிதறிக் கிடக்கும்
நெற்மணி துளிகளை
கொத்தி கொத்திப்
பொறுக்கும் பசிதாக்கமுற்ற
பட்சியாய்
தெரிவான வார்த்தைகளை
தொடுத்து நையப்பட்ட
கவிதையில்
விரல் இடுக்கினிடையே
கொம்புத் தேன்
ரசமாய் உருகி
வழியும் என் காதல்.

படிக்க நீ மறுத்தும்
ஒவ்வொரு வரியும்
உனைப் படிக்கும் புத்தகமாய்
செவிகளை நீ மூடிக்கொண்டும்
ஒவ்வொரு சொல்லும்
உனை ஒலிக்கும் சாகரமாய்
கண்களால் நீ உதாசீனத்தாலும்
உன் பேரழகை பதிவிக்கும்
வர்ணஜால ஓவியமாய்
காதலை நீ மரணித்தாலும்
அது உயிர்வாழும் அரும்படைப்பாய்
என் கவிதைகள் சீவித்திருக்க,
உன் மௌனத்தைக் கலைத்து
இல்லையென்று சொல்லி
என் காதலைக்
கொல்வதை விட
ஒரு பேசா மடந்தையாய்
இருந்துவிட்டுப் போ.
என் கவிதைகளாவது
பிழைத்துப் போகட்டும்!

Thursday, May 3, 2007

கடற்கரை இதிகாசம்

அதீத நடைக்களைப்பில்
பயணிக்கும் பேரலைகள்
கரைகளை வருடி
நுரைகளை உமிழ
புதிதாய் பிறப்பெடுக்கும்
குமிழிகளோடு காதலும்.
விளிம்புகள் அஸ்தமித்து
வாயுக்கள் சங்கமிக்க
கண்ணாடிச் சுவர்களில்
பிரதிபலிக்கும் எல்லையில்லா
அந்திவானம் இணைந்த
இதயங்களின் எதிர்பார்ப்பு
மனமோ?
தன்னந்தனியே உலவி
யாரோடும் சேராது
சிலிர்த்துத் தெறிக்கும்
கண்ணாடி மொட்டுக்களின்
பிம்பங்களில் தொக்கி
வீணாகி நின்ற
பாழான காதல்கள்.
இப்படி அனுப்பொழுதும்
கடற்கரை கட்டும்
காதல் இதிகாசத்தில்
எல்லார் கதைகளும்
ஏதோவொரு பக்கத்தில்.
மேடு குழிகளுமாய்
திக்கற்று விரவிக்கிடக்கும்
மணல்பரப்பின் சுவடுகள்
காதல் நெஞ்சங்களின்
கனவுகளை சுமந்தபடி.
அலைகளின் முதுகை
வருடிவரும் காற்று
கரைதாண்டி மெல்ல
மௌனங்களை விற்றுச்
செல்ல ஸ்பரிசங்களில்
பிரவாகிக்கும் வார்த்தைமேல்
சுண்ணம் பூசி
சலசலக்கும் அலையோசைகள்.
இடைவெளி விட்டு
அமர்ந்தாலும் இதயங்களின்
அரவணைப்பை வெளிப்படுத்தும்
அர்த்தமில்லா மணல்கிறுக்கல்கள்.
தன்னிலை மறந்து
காதலர் சுயங்களை
உரசிப் பார்க்கும்
ஒவ்வொரு துளிப்பொழுதும்
எட்டிப் பார்க்கும்
சின்ன்ஞ்சிறு ஜென்துறவிகள்!

Tuesday, April 17, 2007

இயற்கை அன்பு - குறுங்கவிதை

அந்தி மாலையும் அழகுப் பூக்களும்
சிந்து துளிகளும் சீறும் மின்னலும்
வந்து ரசிக்க வளமான மலைகளும்
தந்து பிரமிப்பது இயற்கையன்பே!

Thursday, April 12, 2007

அம்மா

-----------------------------
மரணவலி கொடுத்த
மட்டற்ற மகிழ்ச்சி
"அம்மா" அந்தஸ்து;
------------------------------
இருட்டு அறைக்குள்
கண்மூடிய நர்த்தனம்
கருவறையில் குழந்தை;
------------------------------
சிசுவின் அலுப்பில்
ஒவ்வொரு உதையிலும்
பெருமையின் வெளிப்பாடு;
------------------------------
எண்ணைக் குளியல்
வெந்நீரின் கதகதப்பில்
அம்மாவின் அன்பு;
-----------------------------
வெண்ணிலவின் ஆக்கிரமிப்பில்
நிரம்பிப் போயிருக்கும்
குழந்தையின் வயிறு;
-----------------------------
ஒற்றை மொழியில்
சர்வதேச சமத்துவம்
குழந்தையின் அழுகை;
-----------------------------
தொலைக்காட்சியில் கிரிக்கெட்
வீரர் எடுக்கும் சதம்
ஓடியாடும் அம்மா;
-----------------------------
அயல்நாட்டு வேலை
டாலரில் சம்பளம்
அம்மா விழியோரம் கண்ணீர்;
-----------------------------
அம்மாவைத் திட்டியவள்
தண்டனை பெறுகிறாள்
மாமியாராக;
-----------------------------
நதி மூலத்திற்கு
திரும்பாத நதி
அம்மா கருவறை;
------------------------------

Monday, April 9, 2007

வேர்கள் நடத்தும் போர்கள்

("வார்ப்பு" சித்திரை 07 இதழில் வெளியான கவிதை)

சூழுகின்ற வெண்பனியையும்
தடவுகின்ற இளவெயிலையும்
தாங்கி நிற்கும் மரங்கள்
பச்சையிலைப் போர்வைகொண்டு...
வண்ண வண்ண மலர்கள்
சிரித்துச் சிரித்துக் கையசைத்து
வாசல் நின்று வரவேற்கும்
வசந்தகாலத்தை!

வண்ணம் தோய்ந்த இலைகள்
கம்பளமாய் விரிந்திருக்க
கோபமுற்ற சருகுகளின்
நள்ளிரவு சரசரப்பில்
மீதமுள்ள எலும்புக்கூடே
தொடை நடுங்கி நிற்கும்
இலையுதிர் காலத்தில்!

கால சுழற்சி நடத்தும்
கைப்பந்து போட்டியிலே
வசந்தமும், இலையுதிரும்
எதிரெதிரே விளையாட
பற்று கொண்டு நோக்கினால்
மறைந்து நிற்கும் உண்மை
புலவாமல் போகலாம்...

காலம் செய்த போதனையின்
கைகளிலே சிக்காமல்
முறுக்கி நிற்கும் வேர்கள்
மண்ணுக்கு அடியிலே
உண்மையின் சுவடாக...

கன்ன மேட்டில் குழிவிழ
மொட்டுக்கள் சிரிப்பதும்
சுருண்டிருக்கும் இளந்தளிர்கள்
கைவிரிக்கத் துடிப்பதும்
தீர்க்கமாய் வீற்றிருக்கும்
வேர்களை உறிஞ்சித்தான்...

பாறைகளைப் பிளப்பதும்
மலைகளைக் குடைவதும்
வெறும் மாலை நேரப்
பொழுதுபோக்காய் இருக்க
ஊடுருவல் ஒன்று
சத்தமில்லாமல் நடக்கும்
வலியில்லாத துளைகளால்
வருத்தமில்லை பாறைகளுக்கு...

திட்டங்கள் வகுத்தும்
பயனில்லை யென்று
சோர்வுற்று போயிருக்கும்
கவலை தோய்ந்த நெஞ்சங்களே!
மண்ணென்ற மூடி போட்டு
வெற்றியெனும் சூத்திரத்தை
வேர்கள் வடிவிலே பாருங்கள்...

வெளியோட்டத்தை விட்டு
சற்றே விலகி நின்றால்
புலப்படும் அந்த வேர்கள்
நெப்போலியன்
தலைவணங்கிய கடவுளாக!

Sunday, April 8, 2007

நிறப் பிரிகை

காற்றில் வடிவங்களற்ற
சிகரெட் புகையாய்
கரைந்து போன
நிர்வாண மனமொன்று
வெளித்தோலின் நிறமதை
உதாசீனப் படுத்தியது
ஈட்டிக் கண்களும்
அம்பு விரல்களும்
குத்திக் கிழிக்காதவரை...

கேட்காமல் கிடைத்த
வரமாய் பார்த்தாள்
தாய் குழந்தையை.
சாபமாய் கிடைத்த
நிறமென்று பார்த்தது
அறிந்துணரா உலகம்...

வெள்ளைப்பால் தொட்ட
கறுப்புக் கடவுள்
சிந்தனைகள் இல்லை...
பூச்சியின் இறக்கையில்
கலந்த வண்ணங்கள்
விலக்கல்கள் இல்லை...
வெள்ளைப் படலத்தில்
கருவிழியின் மிதப்பு
வெறுப்புகள் இல்லை...
கருநீல வானத்துள்
வெண்ணிலாவின் பவனி
மறுப்புகள் இல்லை...
இல்லாதவற்றிக்கு எல்லாம்
சமுதாயம் வைத்ததொரு
அழுத்தமான முற்றுப்புள்ளி...

வானவெற்றிடத்தின் நிறம்?
வெள்ளை ஒளிக்கற்றையில்
விளிம்பு விளைவு?
கதிரவன் விடை
தெரியாமல் கண்விழிக்க
நிறம்பிரிக்கும் பட்டகமாய்
இமை இமைத்தது
ஒன்றுமில்லா சூழ்வெளி.
சாதியென்றும் மதமென்றும்
இனமென்றும் நிறமென்றும்
சமுதாயத்தை நிறம்நிறமாய்
கூறாக்கியது முப்பட்டகமான
ஒன்றுமில்லா மனமோ?

Saturday, April 7, 2007

மறையாத மகாத்மாக்கள்

தேசிய மகாத்மாக்கள்
சிரித்தபடி சிறை வைக்கப்பட்டார்கள்
காகிதங்களில்;

ரூபாயாக
டாலராக
ரூபிளாக
அந்தந்த நாட்டுத்
திறந்தவெளி
காகிதச் சிறைகளில்;

பணங்களின்
முகப்பில் பவனி
வருகிறார்கள்
மனித மனங்களில்
மறந்துவிட்டபடியால்;

மெலிதாய் உதிர்க்கிறார்கள்
புன்னகையை
செல்வந்தன் பெட்டியில்
சிறைப்பட்ட சோகமா
ஏழையின் வயிற்றை
நிரப்பிய மகிழ்ச்சியா
என்று புரிந்து
கொள்ள முடியாதபடி;

அவர் புன்னகை
ஏழையின் கைகளில்
ஜொலிக்க
அவன் ஒளிர்விடும்
சிரிப்பில் தெரியும்
இறைவன் இருப்பு;

கைவிட்டு கைமாறி
கசங்கி கிழிந்து
வாடிப் போயிருந்தும்
வாடாமல் மனிதர்களை
வாழ செய்து
மறைந்தும் மறக்காத
அவர் தியாகங்கள்;

கொள்கைக்கு எதிராய்
துவேஷக் கொடிகள்
பிடித்த பகைவர்
விரல்கள் ஐந்தும்
இப்போது தடவி
மகிழ்கின்றன
அவர் முகப்பை;

"மகாத்மாக்கள் மறைவதில்லை"
பொதிந்து கிடக்கும்
உண்மைகள்
குலுங்கிச் சிரிக்கின்றன
எங்கோ பதுங்கி நின்று;

Friday, April 6, 2007

புதுக்கவிதை

மலைமீது பொழிந்த மழையால்
உருவெடுத்த காட்டாற்று வெள்ளமாக
மனதில் பெருக்கெடுக்கும் கற்பனைகள்!

சிந்தனை அணை நிரம்ப நிரம்ப
திறக்க பொறுத்திருக்கும் மதகுகளாக
விரல்கள் பிடித்திருக்கும் எழுதுகோல்!

விடுபட்ட தண்ணீரை
கொண்டு செல்லும் வடிகாலாக
எழுத்தாணி குத்திய வலிகளை
சத்தமிடாமல் தாங்கிக்கொள்ளும் காகிதம்!

சுழன்று, வளைந்து, ஆடித் தவழ்ந்து
அழகாய்ச் சென்று ஆறாய்
பிறப்பெடுக்கும் ஒரு "புதுக் கவிதை"!

இலக்கணம் என்ற சிமெண்ட்
கரைகள் இதற்கு இல்லை!
எதுகை, மோனை என்ற அலங்கார
படிக்கட்டுகளும் இதற்கு இல்லை!


இன்பமாய் போகும்!
தோன்றினபடி போகும்!
இயற்கையோடு இயற்கையாய் எல்லா
இதயங்களையும் கொள்ளை கொள்ளும்!

இந்தப் புதுநதியின் தண்ணீரை
நீங்களும் கொஞ்சம் பருகிச் செல்லுங்கள்!